ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து பல நகரங்களில் 4ஜி எல்.டி.இ. (4G LTE) சேவையை வழங்கி வருகிறது. சென்ற ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் 296 நகரங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை, புதுச்சேரி, வேலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நகரங்களில் ஏற்கனவே 4ஜி சேவை அறிமுகமானது. தற்போது திருநெல்வேலியில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன், இணையக் குச்சி (Dongle), 4ஜி ஹாட் ஸ்பாட் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் ஆகியவற்றின் மூலம், இந்த சேவை வழங்கப்படுகிறது.
ஏற்கனவே ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள், 3ஜி யிலிருந்து 4ஜிக்கு மாறிக் கொள்ள கட்டணம் எதுவும் ஏர்டெல் நிறுவனம் வசூலிப்பதில்லை என்ற சலுகையை வழங்குகிறது. ஆறு மாத காலத்திற்கு அளவற்ற இசை கோப்புகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதந்தோறும் ஐந்து திரைப் படங்களை இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். ”உலகத் தரத்திலான 4ஜி சேவையினை வழங்க ஏர்டெல் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது” என்று இந்த சேவையை அறிமுகம் செய்திடுகையில், ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் தெரிவித்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, வரும் 2018 ஆம் ஆண்டில் 9 கோடி பேர் 4ஜி சேவையைப் பெற்று இயங்குவார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அப்போது 18 கோடி 4ஜி ஸ்மார்ட் போன்கள் புழக்கத்தில் இருக்கும். தற்போது, 2015 இறுதியில், 4ஜி ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உள்ளது. 4ஜி சேவைக் கட்டணம் படிப்படியாக உயரும் என்றும், 4ஜி ஸ்மார்ட் போன்களின் விலை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகவே, 4ஜி ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. மேலும், 3ஜி மற்றும் 4ஜி ஸ்மார்ட் போன்களுக்கிடையேயான விலை வேறுபாடும் அவ்வளவாக இல்லை. புதிதாக அறிமுகமாகும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் 4ஜி அலைவரிசையில் இயங்குபவையாகவே வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. பயனாளர்களும், தாங்கள் 4ஜி சேவையின் சந்தாதாரர்களாக இல்லாத போதும், 4ஜி திறன் கொண்ட போன்களையே வாங்கி வருகின்றனர்.